உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 ஆண்டாக பதில் மனு தாக்கல் இல்லை மதுவிலக்கு துறைக்கு ரூ.5,000 அபராதம்

8 ஆண்டாக பதில் மனு தாக்கல் இல்லை மதுவிலக்கு துறைக்கு ரூ.5,000 அபராதம்

மதுரை:மதுரை, யாகப்பா நகர் பிரபாகரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 'மாநகராட்சி, நகராட்சியில் வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 50 மீட்டர் துாரத்திற்குள்ளும், பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள்ளும் டாஸ்மாக் கடை மது விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது' என, தமிழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் விதிகளில் உள்ளது. டாஸ்மாக் கடை துவங்கப்பட்ட பின் வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் அத்துார நிர்ணய கட்டுப்பாடு பொருந்தாது என, விதிகளில் உள்ளது.ஆறு வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. விதிகள்படி குழந்தைகளின் வசிப்பிடத்திலிருந்து 1 கி.மீ.,யில் துவக்கப்பள்ளி, 3 கி.மீ.,யில் நடுநிலைப்பள்ளி அமைக்க வேண்டும். கல்விக்காக மத்திய அரசு வரி வசூலிக்கிறது.வழிபாட்டு உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்துள்ளது. வழிபாட்டு தலத்தை விரும்பியவாறு மக்கள் அமைக்கலாம். அமைதியாக இடையூறு இன்றி அங்கு சென்று வர உரிமை உண்டு. வழிபாட்டு தலத்திற்கு அருகில் டாஸ்மாக் கடையை நிறுவ அனுமதிக்கப்படும் பட்சத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும்.மது விற்பனைக்கான விதியானது நகரம், கிராமப்புற மக்களை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்படவில்லை. இது அரசின் மதுபான கடைகளை துவக்குவதற்காக உருவாக்கப்பட்டது. இது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளுக்கு முரணானது.டாஸ்மாக் கடை துவங்கப்பட்ட பின் வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் துார நிர்ணய கட்டுப்பாடு பொருந்தாது என்ற தமிழக மதுபான சில்லரை விற்பனை விதி செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கு 2017ல் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அத்துறைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். டாஸ்மாக் கடை துவங்கப்பட்ட பின் வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் துார நிர்ண கட்டுப்பாடு பொருந்தாது என்ற விதியை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி