உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் எல்லையை அறியும் வசதி கோரி மனு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கடல் எல்லையை அறியும் வசதி கோரி மனு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சென்னை : தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை கண்டறியும் வசதியை ஏற்படுத்த கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். சில ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதாகிஉள்ளனர்.

ஜி.பி.எஸ்., கருவி

அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்தியா- -- இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லையை, தமிழக மீனவர்களால் கண்டறிய முடியாததால், மீனவர்கள் எல்லையை தாண்டுகின்றனர்.மாயமான மீனவர்கள், மீனவர்கள் இறப்பு பற்றிய தகவல்கள் சரிவர பதிவு செய்யப்பட வேண்டும். மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் போன்றவற்றை தடுக்க, சர்வதேச கடல் எல்லையை அறிவுறுத்தவும், அறிந்து கொள்ளும் வகையிலும், ஏ.ஐ.எஸ்., என்ற தானியங்கி அடையாள அமைப்பை, தமிழக கடல் பகுதியில் ஏற்படுத்த வேண்டும். மீன்பிடி படகுகளை கண்டறிய வசதியாக, அனைத்து படகுகளிலும் கட்டணமின்றி, ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும்.மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக, வெளியுறவு அமைச்சகத்துக்கு, 2023 ஆக., 22 மற்றும் 2024 ஜூன் 28ல், தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதன்மீது, எவ்வித நடவடிக்கையும் இல்லை. மீன்பிடி தடைக் காலத்தை பயன்படுத்தி, இலங்கை மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து செல்கின்றனர்.

தள்ளிவைப்பு

கடல் எல்லையை தாண்டும் மற்றும் நுழையும் நபர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதலை கண்காணிக்க, சர்வதேச கடல் எல்லை பகுதியில் பாதுகாப்பில் உள்ள கடலோர காவல் படை மற்றும் கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த முதல் அமர்வு, மனுவுக்கு வெளியுறவு அமைச்சக செயலர், தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழு கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஆகஸ்ட் 16க்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
ஜூலை 22, 2024 18:15

நல்ல முயற்சி. முதன்முதலாக ஒரு நல்ல மனு. அத்துடன் இயந்தர படகுகளின் பினாமி முதலாளிகள் அரசியல்வாதியா என நீதிமன்றம் கண்டறிய வேண்டும். மேலும் ராமனாதாபுரத்தில் ஜி பி எஸ் உள்ளாதா, அதை மீனவர்கள் ஏன் உபயோகப்படுத்துவது இல்லை எனவும் நீதிமன்றம் கண்டு அறியவேண்டும்.


veeramani
ஜூலை 22, 2024 09:23

வாசகர் மீனவர்களுக்கு ஜி பெ எஸ் கருவி இலவசமாக கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். தென் மாவட்ட ஒருவரின் கேள்வி மீனவர்கள் மீன் பிடித்து அரசாங்கத்திடம் விற்கிறார்களா??மீன் குஞ்சுகளும் கூட விடாமல் அரித்து வருகிறார்கள்.. மீன்களுக்கு உரம் போடுவதில்லை. மீன் பிடி தொழில்தான் முதல் போடாமல் பணத்தை அறுவடை செய்கிறார்கள். ராமேஸ்வரம் பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் நன்கு தெரியும் ..இந்திய கடல் எல்லை எதுவரை என்பது. இலங்கை கடலில் சென்று வலை வீசுகிறார்கள். இலங்கையில் வசிக்கும் மீனவர்களும் தமிழ் பேசும் மனிதர்கள்தான் எனவே முட்டாள்தனமான சில செயல்களை செய்யாதீர்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி