சென்னை:ரேஷன் கார்டில் உறுப்பினரின் பெயரை நீக்க, விண்ணப்பதாரர் பெயரில் உள்ள சமையல் காஸ் சிலிண்டர் ரசீதுடன், தற்போது, பெற்றோரின் சமையல் காஸ் சிலிண்டர் ரசீதும் கேட்கப்படுகிறது. இதை சமர்ப்பிக்காத விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதால், அரசு மீது பலரும் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.புதிய ரேஷன் கார்டுக்கு பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க, 'ஆதார்' எண், திருமண பத்திரிகை, காஸ் சிலிண்டர் இணைப்பு ரசீதை பதிவேற்ற வேண்டும். தற்போது, பெற்றோர் உடன் இல்லாமல் தனியே வசிக்கும் பலர், பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பித்து உள்ளனர். அதை, அதிகாரிகள் உரிய காரணமின்றி நிராகரிக்கின்றனர்.இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:பெயர் நீக்கம் செய்ய அரசு அறிவித்துள்ளபடி, ஆதார் எண், திருமண பத்திரிகை, புதிய முகவரிக்கு உட்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் ரசீது உடன் விண்ணப்பம் செய்யப்படுகிறது. பின், விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதாக, மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், திருமண பத்திரிகையுடன், திருமண பதிவு சான்று ஆவணமும், பெற்றோரின் சமையல் காஸ் சிலிண்டர் ரசீதும் வைத்து, புதிதாக விண்ணப்பிக்குமாறு கூறுகின்றனர். இந்த ஆவணங்கள் கேட்கப்படவில்லையே என்று கூறினால், 'இப்போது கேட்கிறோம்' என, அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஒருமுறை விண்ணப்பிக்க, அரசு 'இ - சேவை' மையங்களில், 60 ரூபாயும்; தனியார் மையங்களில், 200 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மீண்டும் விண்ணப்பிக்கும் போது, 'எங்களிடம், 3,500 ரூபாய் கொடுத்தால், பெயரை நீக்கி தருகிறோம்; 10,000 ரூபாய் கொடுத்தால் புதிய கார்டை வாங்கி தருகிறோம்' என, உணவு வழங்கல் அலுவலக பணியாளர்களும், 'பிரவுசிங்' மையங்களை நடத்துவோரும் கூறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, உணவு வழங்கல் துறை பணியாளர்கள் கூறியதாவது:விண்ணப்பதாரருக்கு செலவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, 'விண்ணப்பத்தை எக்காரணத்தை முன்னிட்டும் நிராகரிக்கக் கூடாது; சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரரை நேரில் அழைத்து, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்' என்று, உணவு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தற்போது, புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்வர் என்பதாலேயே, பெயர் நீக்க விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடுகின்றனர். இதற்காகவே, 'பெற்றோரின் சமையல் சிலிண்டர் ரசீது அவசியம், ஒரே மண்டலத்திற்குள் பெற்றோர் மற்றும் விண்ணப்பதாரரின் முகவரி இருக்கக் கூடாது' என, புதிய நிபந்தனைகளை கூறுகின்றனர்.சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் பாதிக்கப்படகூடிய ஆலோசனைகளை, தலைமை அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள், உயரதிகாரிகளிடம் கூறுகின்றனர். இது, அரசு மீது தான் அதிருப்தியை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.