ஏப்ரல் 29, 1891புதுச்சேரியில், கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் தம்பதியின் மகனாக, 1891ல், இதே நாளில் பிறந்தவர் கனக.சுப்புரத்தினம் எனும் பாரதிதாசன். புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி வழியில் படித்தார். தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்பட்டு, இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம், வேதங்களை கற்றார். இளம் வயதிலேயே கவிதை, கதை எழுதும் திறன் பெற்றிருந்தார். கல்லுாரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பை இரண்டே ஆண்டுகளில் முடித்து, முதலாவதாக தேர்ச்சி பெற்றார். காரைக்கால் அரசு கல்லுாரியில் தமிழாசிரியரானார். பாரதியின் பாடலை, திருமண நிகழ்ச்சியில் பாடிய போது, அங்கிருந்த பாரதி இவரை பாராட்டினார்.அவர் மீதான அன்பால், தன் பெயரை, 'பாரதிதாசன்' என மாற்றினார். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் நட்பால் அரசிலுக்கு வந்து, எம்.எல்.ஏ., ஆனார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவர் எழுதிய பல பாடல்கள் சினிமாவில் புகழ்பெற்றன. 'பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு' உள்ளிட்ட நுால்களை எழுதினார். இவர் தன், 72வது வயதில், 1964, ஏப்ரல் 21ல் மறைந்தார், மறைவுக்கு பின், 'பிசிராந்தையார்' நாடகம், 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றது. தமிழக அரசு விருது மற்றும் பல்கலையின் பெயர்களால் வாழும், 'புரட்சிக்கவிஞர்' பிறந்த தினம் இன்று!