| ADDED : மே 11, 2024 09:47 PM
மே 12, 1924ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரவடி என்ற ஊரில், நாதஸ்வர வித்வான் ேஷக் காசிம் மகனாக, 1924ல், இதே நாளில் பிறந்தவர், ேஷக் சின்ன மவுலானா. இவர் சிறுவயதிலேயே தன் தந்தையிடமும், ேஷக் அதம் சாகிப்பிடமும் நாதஸ்வரம் கற்றார். தஞ்சாவூர் பாணி வாசிப்பு முறையால் கவரப்பட்டு, நாச்சியார் கோவில் ராஜம் - துரைக்கண்ணு சகோதரர்களிடம் நாதஸ்வர இசை கற்றார்.டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை மானசீக குருவாக ஏற்று, அவரிடம் நுணுக்கங்களை பழகினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது பக்தி கொண்ட இவர், ஸ்ரீரங்கத்திலேயே குடியேறினார். காவிரிக்கரையில், 'சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம்' அமைத்து, பல இசை கலைஞர்களை உருவாக்கினார்.டில்லியில் நடந்த மூன்றாவது அனைத்துலக ஆசிய வணிக கண்காட்சி, நாட்டின் 25வது சுதந்திர தினம், ஹாங்காங்கில் நடந்த ஏழாவது ஆசிய கலை விழா உள்ளிட்டவற்றில் வாசித்தார். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள், சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர், 1999, ஏப்ரல் 13ல் தன் 75வது வயதில் மறைந்தார். நாதஸ்வரத்தால் உலகை வலம் வந்த இசை மேதை பிறந்த தினம் இன்று!