சிறுமி பாலியல் விவகாரம் பிரபல யூ-டியூபர் கைது
அரியாங்குப்பம், பிப். 21-தவளக்குப்பம், சிறுமி பாலியல் விவகாரத்தில், தவறான செய்தி வெளியிட்ட பிரபல யூ டியூபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம், செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், சென்னையை சேர்ந்த பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாதிக்கப்பட்ட சிறுமியை, அரசியல் தலைவர்கள் பார்த்து, ஆறுதல் கூறி அரசியல் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு கோடி பணம் வேண்டும். உழைக்காமல், பணம் வரவேண்டும், இது எந்த விதத்தில், நியாயம். சிறுமிக்கு கடலுாரில் நடந்த மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் பொய்யானது. ஜிப்மரில் நடந்த சிறுமியின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்டில் ஒன்றும் இல்லை. மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. சிறுமி சொல்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வழக்கை, முதல்வர் மற்றும் டி.ஜி.பி., விசாரித்து, உண்மை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து, சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பாக, தவறான செய்தி வெளியிட்ட சென்னை குன்றத்துார், மணிகண்டன் நகரைச் சேர்ந்த பிரபல யூ-டியூபர் கார்த்திக்பிள்ளை,39; மீது இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்குதல் (பி.என்.எஸ்.196) மற்றும் போக்சோ 23 ஆகிய பிரிவுகளில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.