சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
திண்டுக்கல்:''சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்'' என, ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அருந்ததியர் உள் ஒதுக்கீடு எங்களுக்கு கிடைத்த வெற்றி. விளிம்பு நிலை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்கிறார். மத்திய அமைச்சர் எல்.முருகனை நோக்கி, 'தமிழனே அல்லாதவருக்கு ஏன் பதவி கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்புகிறார். சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். வி.சி., தலைவர் திருமாவளவனும் உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார். அவரும் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டது. அதைக் கொண்டு வந்ததால், தி.மு.க., அரசிற்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம். வாழை படத்திற்கு தேசிய விருது வழங்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்பினால், ஏன் தனி தொகுதியில் போட்டியிட வேண்டும். பொது தொகுதிகளில் போட்டியிடலாமே. எல்லா விஷயத்திலும் முரண்பட்டு நிற்பவர் கிருஷ்ணசாமி.இவ்வாறு அவர் கூறினார்.