| ADDED : ஏப் 30, 2024 07:47 AM
சமவெளி வெப்பத்தில் இருந்து தப்ப, ஊட்டி உட்பட மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணியர் படையெடுத்து வருகின்றனர்.ஆனால், ஊட்டியில் பகல் நேரங்களில் கடும் வெயிலான காலநிலை நிலவுவதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, கோடைக் காலத்தில் மார்ச், ஏப்., மாதங்களில் அதிகபட்சம் 23 முதல் 24 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.ஆனால், நடப்பாண்டு ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக, கடந்த, 24 முதல், 27ம் தேதி வரை ஊட்டியில் குறைந்த பட்சம் 14, அதிகபட்சம் 26 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இரண்டு நாட்களாக, குறைந்த பட்சம் 14, அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால், பகல் நேரங்களில் கோவையை போன்ற காலநிலை நிலவுகிறது. மாலை 4:00 மணிக்கு மேல் இதமான காலநிலை நிலவுகிறது. இதே நிலை தொடர்ந்தால், இதமான காலநிலையை இழக்க வேண்டிய சூழ்நிலை 'மலையரசி'க்கு ஏற்படும் என்பது உள்ளூர் மக்களின் கவலையாக உள்ளது. எனினும், சுற்றுலா பயணியர் கூட்டம் நாள்தோறும், 20,000மாகஉள்ளது.