உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்மிருதி இரானி, குஷ்புவுக்கு செயல் தலைவர் பதவி?

ஸ்மிருதி இரானி, குஷ்புவுக்கு செயல் தலைவர் பதவி?

பா.ஜ., தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி; தமிழக செயல் தலைவராக நடிகை குஷ்புவை நியமிப்பது குறித்து, அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழு ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ., தேசிய தலைவராக உள்ள ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ல் நிறைவடைந்து விட்டது. அவர் தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது அல்லது புதிய தலைவர் தேர்வு குறித்து, பா.ஜ., உயர்மட்ட நிர்வாக குழு ஆலோசித்து வருகிறது.புதிய தலைவரை நியமிக்கும் வரை, செயல் தலைவரை நியமிக்க வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில், செயல் தலைவர் பதவிக்கு, மகளிருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழக செயல் தலைவராக, நடிகை குஷ்பு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தனக்கு கட்சியில் முக்கிய பதவி தர வேண்டும் என, சில மாதங்களாக குஷ்பு, டில்லி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார். அதற்காக, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:இந்த ஆண்டு இறுதியில், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைக்காத பட்சத்தில், சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மை வெற்றியை பெற, பா.ஜ., மேலிடம் வியூகம் அமைத்துள்ளது.உ.பி., மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மாநிலத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்காததால், அவரை செயல் தலைவராக்க வாய்ப்பு உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் படிப்பு படிக்க, செப்டம்பரில் லண்டன் செல்கிறார். ஆறு மாதங்கள் அங்கு தங்கி இருப்பார்.இதை வைத்து, தலைவர் பதவியை கைப்பற்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை, தேசிய மகளிர் அணி செயலர் வானதி, கட்சியின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்று, திட்டவட்டமாக கட்சி மேலிடம் கூறிவிட்டது.அதேநேரம், அவர் படிப்பை முடித்து திரும்பும் வரை, எந்த கோஷ்டியையும் சாராமல் செயல்படும் வகையில், குஷ்புவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க, டில்லி மேலிடம் ஆலோசித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை சேர்த்தல், உட்கட்சி தேர்தல் பணிகளை, செயல் தலைவர் வாயிலாக மேற்கொள்ளவும் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'என் பெயரை கேட்டாலே தி.மு.க.,வினர் நடுங்கிறாங்க'

நடிகை குஷ்பு கூறியதாவது: எந்த ஒரு அழுத்தம் காரணமாகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அந்த பதவியில் இருக்கும் போது, கட்சி அலுவலகத்திற்கு என்னால் வர முடியவில்லை. பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு கிடையாது. கட்சி வளர்ச்சி பணிகளில், சுதந்திரமாக ஈடுபடவே உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.இதுதொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம், ஆறு மாதங்களுக்கு முன் தெரிவித்து விட்டேன். அவர்கள் ஒப்புதலுடன், கடந்த மாதமே ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டேன். தற்போது தான் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளனர். என் முழு கவனம் அரசியலில் தான் உள்ளது. தி.மு.க.,வினருக்கு என்னை பார்த்தால் பயம். கட்சி சார்பாக பேச முடியாத சமயத்திலேயே, நான் பல விஷயங்களை பேசி இருக்கேன். தற்போது, கட்சி சார்பாக பேசும்போது, எவ்வளவு பேசுவேன். என் பெயரை கேட்டாலே, தி.மு.க.,வினர் கொஞ்சம் நடுங்குகின்றனர். இனி மேல் தான் என் விளையாட்டு ஆரம்பிக்க போகிறது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். மடியில் எவ்வளவு கனம் இருக்கிறது என்று தி.மு.க.,வினருக்கு தெரியும். அந்த பயத்தில் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை