தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,வுக்கு பெருகும் ஆதரவு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
கோவை : ''தி.மு.க., மீதான வெறுப்பால், மக்களிடையே அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது,'' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மொழியை திணிக்க மத்திய அரசு முயன்றால், தமிழகத்தில் புதிய பிரச்னை ஏற்படும். இருமொழி கொள்கையைத் தான் பின்பற்ற வேண்டும் என அ.தி.மு.க.,வும் சொல்கிறது. வேறு மொழிகளை யாரும் படிக்க விரும்பினால் படிக்கலாம்; தவறில்லை. தமிழகத்தில் எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கையை குறைந்தால், அதை அ.தி.மு.க., எதிர்க்கும். தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை தங்கு தடையில்லாமல் மத்திய அரசு கொடுக்க வேண்டும்; எதற்காகவும் மக்கள் சிரமப்படும் காரியங்களை செய்யக்கூடாது. தி.மு.க., மீதான வெறுப்பால், மக்கள் அ.தி.மு.க.,வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டணி குறித்து, தேர்தல் நெருக்கத்தில் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி மட்டுமே முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.