உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய உணவு பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியும் தமிழக அரசு பதில் இல்லை எண்ணெய், வித்துக்கள் சங்கம் அதிருப்தி

மத்திய உணவு பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியும் தமிழக அரசு பதில் இல்லை எண்ணெய், வித்துக்கள் சங்கம் அதிருப்தி

மதுரை: தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறு பகுப்பாய்வு ஆய்வகங்களில் காலாவதியான உணவு மாதிரிகளை பகுப்பாய்வு செய்து தவறான அறிக்கை தருகின்றனர். இதுகுறித்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியும் தமிழக அரசு பதிலளிக்கவில்லை' என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.இதுகுறித்த சங்கத்தலைவர் அருணாச்சலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:எங்களிடம் இருந்து உணவு மாதிரிகளை பெறும் போது 14 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த உணவு மாதிரிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்தால் தான் அதன் உண்மைத்தன்மை தெரியவரும். மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் ஆய்வு மாதிரிகளை கிடப்பில் போட்டு நிதானமாக ஆய்வு செய்யும் போது அந்த உணவுப்பொருள் பயன்படுத்தும் தேதியே காலாவதி ஆகி விடுகிறது. காலாவதியான உணவு மாதிரிகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்தால் அறிக்கையும் தவறாக தானே வரும். அரிசி, எண்ணெய் உட்பட அனைத்து உணவுப்பொருட்களையும் ஆய்வகத்தில் ஆய்வு செய்த போது கிடைத்த அறிக்கைகள் தவறாக உள்ளன. எடுப்பது ஒரு நிறுவனத்தின் உணவு மாதிரி, அறிக்கையில் வேறு ஒரு நிறுவனத்தின் மாதிரி என தவறாக குறிப்பிடுகின்றனர்.உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடத்த வேண்டும். இரண்டாண்டுகளாக கூட்டமே நடத்தவில்லை. பதில் தராத தமிழக உணவு பாதுகாப்புத்துறை:தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய உணவு பாதுகாப்புத்துறைக்கு 5 மாதங்களுக்கு முன் தபால் மூலமும், 15 நாட்களுக்கு முன் இமெயிலுக்கும் கடிதம் அனுப்பினோம். மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை ஒழுங்குமுறை இணக்க (ரெகுலேட்டரி கம்ளையன்ஸ்) இயக்குநர் ராகேஷ்குமார் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 'உங்களது புகார் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினோம். பதில் வரவில்லை. தமிழக அரசிடம் இருந்து பதில் கிடைத்த பின் நடவடிக்கை குறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம்' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே மாநில உணவுப்பாதுகாப்புத்துறையில் உள்ள பிரச்னைகளை முதல்வர் ஸ்டாலின் சரிசெய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ