உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை களமாகும் தமிழகம்: இணையமைச்சர் முருகன் காட்டம்

கொலை களமாகும் தமிழகம்: இணையமைச்சர் முருகன் காட்டம்

“கேரளா, மேற்கு வங்கம் வரிசையில் தற்போது தமிழகம் புதிய கொலைக்களமாக உருவெடுத்து வருகிறது,” என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் விமர்சித்துள்ளார்.'தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் பட்டியலின சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும்' என, டில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் கமிஷன் மற்றும் தேசிய பட்டியலின கமிஷன் அலுவலகங்களில் தமிழக பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் முருகன், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் துரைசாமி தலைமையிலான குழு கோரிக்கை மனு அளித்தது.

அரசு தோல்வி

பின், முருகன் அளித்த பேட்டி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பட்டியலின சமூகத்தினர் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கொடுமைகளுக்கு பட்டியலின மக்கள் ஆளாகி வருகின்றனர்.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு, சமீபத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவமே உதாரணம். மேற்கு வங்கம், கேரள மாநிலங்களின் வரிசையில் தற்போது தமிழகம் சேர்ந்துள்ளது. கொலைக்களமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பேணி காப்பதில், ஆளும் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக நீதியை காக்கும் அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறுவதற்கு, எந்த உரிமையும் இல்லை.

அதிர்ச்சி

பட்டியலினத்தினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து, 65 பேர் பலியான விவகாரம் உள்ளிட்டவற்றை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.ஹாத்ரஸ், மணிப்பூர் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழகத்தில் அரங்கேறும் வன்முறை சம்பவங்கள் பற்றி பார்லிமென்டில் கேள்வி எழுப்பாதது ஏன்? கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினரை காண காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் ஆகியோர் வராமல் இருந்தது ஏன்? அப்பகுதிக்கு செல்ல அவர்களுக்கு வழி தெரியவில்லை என்றால், நாங்கள் உதவத் தயார். தமிழகத்தில், 24 மாவட்டங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது தவிர, பஞ்சாயத்து தலைவர்களாக தேர்வான பட்டியலின மக்களை, உரிய முறையில் பணியாற்ற விடாமல் ஆதிக்க ஜாதியினர் தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வான உள்ளாட்சி பிரதிநிதிகளை கூட பணி செய்ய விடாமல் தடுக்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Desikan
ஜூலை 10, 2024 14:28

From this it is clear that brahmins r not responsible for the untouchability said in this article. It is always brahmins never be a party for untouchability.


முருகன்
ஜூலை 10, 2024 06:56

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்சினை பற்றி பேசுவது இருக்கட்டும் மணிப்பூர் பற்றியும் பேசுங்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ