சென்னை:'பழங்குடியின மாணவர்களுக்கு இனச் சான்றிதழ் விரைந்து வழங்கக்கோரி, அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், ஜூலை 2ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.சங்க மாநில குழுக் கூட்டம், நேற்று முன்தினம் சேலத்தில் நடந்தது. கூட்டத்தில், பழங்குடியினர் மாணவர்களுக்கு இனச்சான்றிதழ் விரைந்து வழங்கக்கோரி, ஜூலை 2ல், அனைத்து ஆர்.டி.ஓ, அலுவலகம் முன்னரும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.வீட்டுமனை இல்லாத பழங்குடியின மக்களுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பட்டா பெற்றுள்ள வீடற்ற பழங்குடியின மக்கள் அனைவருக்கும், 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில், வீடுகள் கட்டித்தர வேண்டும். தமிழகத்தின் பூர்விக குடிகளான, மலைபுலையன், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின் உட்பிரிவினர், வேட்டைக்காரன் ஆகிய பழங்குடியின மக்களை, தமிழக அரசு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.