மன்னிப்பு கோரியதை அரசு ஏற்றது மத்திய அமைச்சர் மீதான வழக்கு ரத்து
சென்னை:பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, அவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஓட்டலில், கடந்த மார்ச் மாதம் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், கர்நாடகாவில் குண்டு வைப்பதாக, அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே பேசினார்.அவரின் பேச்சுக்கு எதிராக மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய இணை அமைச்சர் தரப்பில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மன்னிப்பு கோரி பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''மன்னிப்பு கோரிய பிரமாண பத்திரத்தின் உள்ளடக்கங்களை பதிவு செய்து, வழக்கை ரத்து செய்யலாம். அவரின் மன்னிப்பை, தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்கிறது,'' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதி, மத்திய இணை அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.