| ADDED : மார் 28, 2024 01:36 AM
தேனி,:தேனி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை மறந்து காரில் வைத்து விட்டு கலெக்டர் அலுவலகம் வந்தார். இதனால் அவருடன் வந்த அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி அதிருப்பதி அடைந்தனர்.தேனி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நேற்று தங்கதமிழ்செல்வன் கட்சி தொண்டர்களுடன் தேனி நேரு சிலையில் இருந்து காரில் ஊர்வலமாக வந்தார்.கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கள் நிறுத்தப்பட்டன. இரு கார்களில் தங்கதமிழ்செல்வன், அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், காங்., மாவட்ட தலைவர் முருகேசன் அலுவலக வளாகத்திற்குள் வந்தனர்.அலுவலகத்திற்குள் வந்த பின்பு வேட்பு மனுவை எடுக்காமல் வந்தது வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு ஞாபகம் வந்தது. உதவியாளரிடம் கூறி மனு எடுத்து வர கூறினார்.இதனால் அவருடன் வந்த அமைச்சர்கள் 10 நிமிடங்கள் தரைத்தளத்தில் காத்திருந்தனர். காரில் இருந்த மனுவை அவசரமாக எடுத்து வந்து பின் மனுத்தாக்கல்செய்தனர்.பின் தங்கதமிழ்செல்வன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணை பலப்படுத்தும் திட்டம், திண்டுக்கல்- சபரிமலை ரயில்பாதை திட்டம், உசிலம்பட்டி - தேனி - போடி பைபாஸ் திட்டம் நிறைவேற்றப்படும்.முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்டு வெற்றி பெறுவேன். தேர்தல் களம் என்பது தொடர்ந்து மக்களை சந்திப்பது. தினகரன் 15 ஆண்டுகளாக களத்தில் இல்லை. இந்த 15 ஆண்டுகளில் பல பிரச்னைகள் உள்ளது. தி.மு.க.,விற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இண்டியா கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.,விற்கு பல இடங்களில் ஆதரவு குறைந்துள்ளது. தினகரன் ஒரு சீட் வெற்றி பெற்றால் பிரதமரை தேர்வு செய்ய இயலுமா. தி.மு.க., 40 தொகுதியில் வெற்றி பெறும். தேர்தலுக்குப்பின் பிரதமர் வேட்பாளர் பற்றி தெரிவிப்போம்.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்து தினகரன், சசிகலாவை சாடினார். தினகரன் கட்சி துவங்கி பன்னீர்செல்வத்தை சாடினார். தற்போது இருவரும் சேர்ந்துள்ளனர்.தினகரனும், பன்னீர் செல்வமும் ஒரு சின்னத்தை வாங்கி தொண்டர்கள் பலத்தை நிரூபித்திருக்க வேண்டும்.தினகரன் பா.ஜ., உடன் உள்ளார். பன்னீர்செல்வம் சுயேச்சையாக உள்ளார். இருவரும் நடிக்கிறார்கள் என்றார்.