சென்னை:புதுச்சேரி இளைஞரின் உடல் பருமன் அறுவை சிகிச்சையில் தவறில்லை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கான போதிய வசதி இல்லாததே இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என, முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 156 கிலோ எடை
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன், 26. இவர், சர்க்கரை நோய் மற்றும் 156 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே, உடல் எடையை குறைக்க பல்வேறு வகையில் முயற்சித்துள்ளார். 'யு டியூப்'பில் உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை குறித்து பேசிய டாக்டரின் வீடியோவை பார்த்து சென்னை வந்துள்ளார். அந்த குறிப்பிட்ட டாக்டர் பெருங்கோ, இரண்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். அதன்படி, குறைந்த செலவில், பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் தனியார் மருத்துவமனையில் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற ஹேமச்சந்திரனை, மற்றொரு தனியார் மருத்துவமனையான ரேலாவில் சேர்த்துள்ளனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மருத்துவ, ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் இணை இயக்குனர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை
விசாரணையின் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை மற்றும் மருத்துவச் சான்றுகளை ஆய்வு செய்தபோது, அறுவை சிகிச்சையில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என தெரிகிறது. அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.அதேநேரம், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஹேமச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான உடனடி தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில், அம்மருத்துவமனையில் வசதியில்லை. இதனால், மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். விசாரணையின் முழுமையான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.