உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய பட்ஜெட்டில்  மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது: ராம்தாஸ்

மத்திய பட்ஜெட்டில்  மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது: ராம்தாஸ்

திண்டிவனம்:''மத்திய பட்ஜெட்டில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தைலாபுரத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், 18,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தும், 10,000 கோடி ரூபாயாக நஷ்டம் அதிகரித்துள்ளது.கடந்த 22ம் ஆண்டு 36,500 கோடி, 23ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் 34,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தும், 3,420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கூறியுள்ளது. இதனால், மின்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவது தெரிய வருகிறது.ஒவ்வொரு முறையும் மின் கட்டணமாக, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. எனவே, இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று முதலில் கூறிவிட்டு, தற்போது வழங்க முடியாது என்று முதல்வர் கூறி வருகிறார். போராட்டம் குறித்து முடிவு செய்வதற்கு, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. அதில் போராட்ட வடிவம், தேதி குறித்த அறிவிப்பு முறைப்படி அறிவிக்கப்படும். திண்டிவனம் -- நகரி ரயில்பாதை பணிகளுக்கு கணிசமான நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-- - திருவண்ணாமலை ரயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்காததால், திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அரசு விரைவில் நிலத்தை கையப்படுத்தி கொடுக்க வேண்டும்.மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலுார் கிழக்கு கடற்கரை பாதை திட்டத்திற்கு, 205 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல. ஆண்டிற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகள் மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. 2019 அரசு ஆணைப்படி முறையான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிகப் பணிகளுக்கு, 20,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும், 600 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 200 ரூபாய் வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும்.மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்