| ADDED : ஜூன் 09, 2024 02:45 AM
சென்னை: 'விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, மழையில் நனையாமல் பாதுகாத்து, உடனுக்குடன் ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசியாக மாற்ற வேண்டும்' என, அதிகாரிகளை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்திஉள்ளார்.பொது வினியோக திட்டம், நெல் கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், துறை செயலர் கோபால், உணவு வழங்கல் ஆணையர் ஹர்சஹாய் மீனா, நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சக்கரபாணி பேசியதாவது:ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் செயல்படுவதையும், உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில், ரேஷன் கடைகளை புதிதாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷன் கார்டுதாரர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் கொள்முதலில் எவ்வித முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை, திடீரென பெய்யும் மழையில் நனையாத வகையில் பாதுகாத்து, உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.