உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிய நாணயங்களை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

அரிய நாணயங்களை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரிய நாணயங்களை பாதுகாக்க வேண்டியது வரலாற்றுக்கு அவசியம்,'' என, சென்னை அருங்காட்சியக முன்னாள் காப்பாளரும், ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு கல்வியக இயக்குனருமான ஜெயராஜ் கூறினார்.தமிழக தொல்லியல் துறை மாணவர்களுக்கு, அரிய நாணயங்களை பாதுகாப்பது குறித்த பயிற்சி, சென்னை, 'தினமலர்' அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், சங்க கால நாணயவியல் ஆய்வாளரும், 'தினமலர்' முன்னாள் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி சேகரித்த, அரிய நாணயங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றின் தன்மை மாறாமல், வேதியியல் முறையில் சுத்தம் செய்வது குறித்து, ஜெயராஜ் பயிற்சி அளித்தார்.அவர் மாணவர்களிடம் கூறியதாவது:நீங்கள், இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகங்களில் மட்டுமே பார்த்த நாணயங்களை, தொட்டு, உணர்ந்து, அவற்றின் உண்மை தன்மையை அறிந்து, அவற்றை பாதுகாக்கும் முறையை அறிய உள்ளீர்கள். அவர் சேகரித்த நாணயங்கள் அனைத்தும் அரியவை. அவற்றை, வேறு எந்த அருங்காட்சியகத்திலும் காண முடியாது. அதனால் அவற்றை பாதுகாப்பது, வரலாற்றை பாதுகாப்பதற்கு சமம். நாணயங்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. நாணயங்கள் எந்த உலோகத்தால் ஆனவை என்பதை அறிந்த பின் தான், அதை பாதுகாக்கும் முறையை தேர்வு செய்ய முடியும். பொதுவாக, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் உள்ளிட்ட உலோகங்களால், அவை வார்க்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மாதிரியான பாதிப்புகள் உருவாகும். பொதுவாக, ஈரப்பதம், காற்று, உப்புத்தன்மை, வெப்பம் உள்ளிட்டவற்றால், ஒவ்வொரு உலோகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பு ஏற்படும்.அவற்றை, இயற்கை, செயற்கை, வேதியியல், மீக்குறைமின்சாரம், லேசர், அல்ட்ரா சோனிக் உள்ளிட்ட முறைகளால் சுத்தப்படுத்தலாம். பொதுவாக, மிகச்சிறியதும், மெல்லியதுமான சங்க கால நாணயங்களை சுத்தப்படுத்தும்போது, மிக கவனமாக செயல்பட வேண்டும். அவற்றில் சிறு கீறல் விழுந்தாலும், அதன் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படும். அதனால், கவனமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தமிழக தொல்லியல் துறை அலுவலர் சுபாஷினி, ரிசர்வ் வங்கி மும்பை கிளையின் நாணயவியல் அருங்காட்சியக வடிவமைப்பாளர் ராதாகிருஷ்ணன், 'தினமலர்' நாளிதழின் இணையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, ஸ்ரீவித்யா அர்ஜுன், கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

bala chandar
ஜூன் 26, 2024 11:00

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளன.... தொடர்பு கொள்ளவும்


bala chandar
ஜூன் 26, 2024 10:58

சார், என்னிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளன....இதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து எடுத்துக் கொள்கிறீர்களா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி