| ADDED : ஜூன் 27, 2024 01:42 AM
சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர், கடந்த 18, 19ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், 225 பேர் சேர்க்கப்பட்டனர்.இதில், 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்த, 77 பேரை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு, 12 முதல் 24 மணி நேரத்திற்கு பின், அறிகுறிகள் தெரியவரும். அறிகுறிகள் தெரியவரும்போது அதன் பாதிப்பு தன்மை தீவிரமாக இருக்கும். அவ்வாறு அறிகுறி தெரியாமல் வீட்டில் இருந்தவர்களை, நர்ஸ்கள் வாயிலாக கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.