சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, வரும் 22ம் தேதி, சென்னை, பனையூரில் நடிகர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.'விஜய் மக்கள் இயக்கம்' என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார்.தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்திக்கும் கட்சி நிர்வாகிகள், இடத்துக்கு சொந்தமானவர்களிடம் பேசி வருவதாகத் தகவல். அவர்கள் இடத்தை மாநாடுக்குத் தர ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், விக்கிரவாண்டியிலேயே திட்டமிட்டப்படி மாநாடு நடக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், மாநாட்டின்போது கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே கட்சிக் கொடியை அறிமுகம் செய்வது என விஜய் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், வரும் 22ம் தேதி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்யவிருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் வாகை மலருடன், புதிய கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளதாக, விஜய் கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர். வாகை என்றால் வெற்றி என பொருள். கட்சியின் பெயரில் வெற்றி இருப்பதால், வாகை மலரை விஜய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.