| ADDED : ஏப் 17, 2024 09:32 PM
சென்னை:தமிழகத்தில் 65 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவை நேரலையில் கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்க, 'வெப் கேமரா' பொருத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 44,800 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், குறைந்தது 65 சதவீத ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அனைத்திலும், வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்க, தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் மாளிகை 10வது தளத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிப்பதற்காக, 16 'டிவி'கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில், 15 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.