உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி மாணவியர் சபாஷ்: சுயநிதி பள்ளிகள் டாப்

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி மாணவியர் சபாஷ்: சுயநிதி பள்ளிகள் டாப்

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 0.16 சதவீதம் அதிகம். அத்துடன், மாணவர்களை விட மாணவியர், 5.95 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26 முதல், ஏப்ரல் 8 வரை நடந்தது. இதில், 12,625 பள்ளிகளைச் சேர்ந்த, 8.94 லட்சம் மாணவ  - மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, இணை இயக்குனர்கள் செல்வகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் நேற்று காலை வெளியிட்டனர்.தேர்வில், 91.55 சதவீதமான, 8.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.47 லட்சம் மாணவியர் தேர்வு எழுதியதில், 94.53 சதவீதமான, 4.23 லட்சம் பேரும்; 4.47 லட்சம் மாணவர்களில், 88.58 சதவீதமான, 3.96 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

16,000 பேர் 'ஆப்சென்ட்'

ஒட்டுமொத்தத்தில், கடந்த ஆண்டு 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், அதைவிட அதிகமாக, 0.16 சதவீதம், இந்த ஆண்டில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில அளவில், 4,105 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில், அரசு பள்ளிகள் 1,364; தனியார் பள்ளிகள் 2,741. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, 9.10 லட்சம் பேர் பதிவு செய்ததில், 16,000 பேர் பங்கேற்கவில்லை. 32,348 தனித்தேர்வர்கள் பதிவு செய்ததில், 2,236 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சியில், தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 97.43 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 மற்றும் அரசு பள்ளிகள் 87.90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.பாலின வகைப்பாட்டில், மகளிர் பள்ளிகள் 93.80 சதவீதத்துடன் அதிகபட்ச தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகள் 91.93 சதவீதம்; ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சிறைவாசிகள் தேர்ச்சி

இந்த தேர்வில், 13,510 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். அவர்களில், 92.45 சதவீதமாக 12,491 பேர் தேர்ச்சி பெற்றனர். சிறைவாசிகளை பொறுத்தவரை, 260 பேர் தேர்வு எழுதி, 228 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழில் எளிய வினாத்தாள்

ஆனால் 'சென்டம்' குறைவு

பத்தாம் வகுப்பு தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 'சென்டம்' என்ற, 100க்கு 100 எடுத்த மாணவர்களில், அதிகபட்சம் கணிதத்தில், 20,691 பேர் இடம் பெற்றுள்ளனர்.அறிவியல் பாடத்தில், 5,104 பேர், சமூக அறிவியலில், 4,428 பேர் மற்றும் ஆங்கிலத்தில், 415 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில், எட்டு மாணவர்கள் மட்டுமே, 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு தமிழ் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்த, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. அதனால், தமிழில், 100க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

சமூக அறிவியலில் அதிகம் 'பெயில்'

மொத்தம், 8.94 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். பாடவாரியாக சமூக அறிவியலில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதாவது, 95.74 சதவீதமாக, 8.56 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 4.26 சதவீதமாக, 38,000 பேர் பெயிலாகியுள்ளனர்.ஆங்கிலத்தில், 99.15 சதவீதமாக அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 8.86 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.தமிழில், 96.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 28,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. கணிதத்தில், 96.78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 25,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. அறிவியலில், 96.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 30,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.

பழங்குடியினர் நலத்துறை முன்னிலை

அரசுத்துறை நிர்வாக ரீதியான பள்ளிகளில், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது. பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 1,828 பேர் தேர்வு எழுதி, 92.45 சதவீதமாக, 1,690 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்* கள்ளர் சீரமைப்பு நிர்வாகத்தில், 2,157 பேர் தேர்வு எழுதி, 91.75 சதவீதமாக, 1,979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்* வனத்துறை நிர்வாகப் பள்ளிகளில், 143 பேர் தேர்வு எழுதி, 90.01 சதவீதமாக, 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்* பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக பள்ளிகளில், 4.28 லட்சம் பேர் தேர்வெழுதி, 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 87.90 சதவீதமாகும்* சமூக நலத்துறை பள்ளிகளில், 342 பேர் பங்கேற்று, 86.55 சதவீதமாக, 296 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்* நகராட்சி பள்ளிகளில், 8,347 பேர் தேர்வு எழுதி, 86.13 சதவீதமாக, 7,189 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்* ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 5,834 பேர் தேர்வு எழுதி, 84.68 சதவீதமாக, 4,940 பேரும்; மாநகராட்சி பள்ளிகளில், 11,629 பேர் தேர்வெழுதி, 84.47 சதவீதமாக, 9,823 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூலை 2ல் துணைத் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 75,521 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கு ஜூலை 2ல் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்வியில் சேர விண்ணப்பிக்கத் தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும், 13ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால், அதற்காக விடைத்தாள் நகல் பெற வேண்டும். விடைத்தாள் நகல் பெற, வரும், 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே விண்ணப்பிக்கலாம்.சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூலை 2 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும். இதற்கான கால அட்டவணை வரும், 11ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர் எண்ணிக்கை சரிவு

அரியலுார் 'டாப்' - சென்னை 'பணால்'

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளின் தேர்ச்சியில், அரியலுார், சிவகங்கை மாவட்டங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. தேர்ச்சி விகிதம் சரிந்ததில், அனைத்து வகை பள்ளிகளில், வேலுார், ராணிப்பேட்டையும்; அரசு பள்ளிகளில் சென்னையும், செங்கல்பட்டும், கடைசி இடங்களை பிடித்துள்ளன.முன்னிலை இடம்அனைத்து பள்ளிகள்(சதவீதத்தில்) அரசு பள்ளிகள் (சதவீதத்தில்)1. அரியலுார் - 97.31 அரியலுார் 96.202. சிவகங்கை - 97.02 சிவகங்கை 95.453. ராமநாதபுரம் - 96.36 கன்னியாகுமரி 95.17 தேர்ச்சி குறைவான மாவட்டங்கள்அனைத்து பள்ளிகள் அரசு பள்ளிகள்1. வேலுார் - 82.07 வேலுார் 77.662. ராணிப்பேட்டை 85.48 சென்னை 79.073. திருவண்ணாமலை 86.10 செங்கல்பட்டு 79.20கடந்த 2020ம் ஆண்டில், 9.40 லட்சம் மாணவர்களும்; 2021ல் 9.60 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினர். 2022ம் ஆண்டில், 9.13 லட்சம் பேராக மாணவர் எண்ணிக்கை குறைந்தது. 2023ல், 9.14 லட்சமாக மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இந்த முறை, கடந்த ஆண்டை விட, 20,000 பேர் குறைவாக, 8.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 50,000 பேர் வரை குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ