உடல் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிஅரசு மருத்துவமனைகளில் எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை:'தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குரிய வசதிகள் எவ்வளவு கால வரம்பிற்குள் ஏற்படுத்தப்படும் என்பது குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை, கே.கே.நகர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: கல்லீரல் பாதிக்கப்பட்டோருக்கு, விபத்துக்களில் மூளைச்சாவு ஏற்பட்டு இறப்போரிடமிருந்து தானமாக கல்லீரல் பெற்று பொருத்தினால் மட்டுமே காப்பாற்ற வாய்ப்புள்ளது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். இதுவரை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளவில்லை.சென்னை ஸ்டான்லி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மது அருந்துவோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மது விற்பனையால் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், கல்லீரல் பாதித்தோரின் சிகிச்சைக்கு நிதி ஒதுக்குவது குறைவு. ஏழை நோயாளிகளுக்கு கடைசி நம்பிக்கை அரசு மருத்துவமனைகளே. மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி, தமிழக சுகாதாரத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில், 'ஒரு தனியார் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வெளிநேயாளிகள் பிரிவு செயல்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பு, 'மதுரை அரசு மருத்துவமனையில் அந்த வசதி இல்லை என்பது தகவல் உரிமை சட்டத்தில் பெற்ற தகவலில் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் ஓராண்டிற்குள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குரிய வசதிகளை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2017 ஜன., 20ல் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லை. இது தொடர்பான அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது' என, விவாதம் செய்யப்பட்டது.நீதிபதிகள், 'ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குரிய வசதிகள் எவ்வளவு கால வரம்பிற்குள் ஏற்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் செப்., 26ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.