டில்லி பாரத் டெக்ஸ் - 2025 கண்காட்சி திருப்பூருக்கு ஆர்வம் குறைந்தது ஏன்?
திருப்பூர்:'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை என தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் 11 வகையான தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் சார்பில், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி டில்லியில் நடத்தப்படுகிறது. புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடக்கும், 2வது கண்காட்சியில், நுாற்புஆலைகள், பஞ்சு வர்த்தகம், செயற்கை நுாலிழை, ஆயத்த ஆடை, துணிகள், கைத்தறி ஜவுளி உட்பட, ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு தொழில் வளர்ச்சி கவுன்சிலுக்கும், 200 முதல், 300 'ஸ்டால்'கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், 360 'ஸ்டால்'கள் அமைக்கப்பட்டுஉள்ளன.கடந்தாண்டு நடந்த, 'பாரத் நிட்வேர்' கண்காட்சியில், ஆயத்த ஆடை பிரிவில், பின்னலாடைகளுக்கு பிரத்யேக அரங்கம் ஒதுக்க வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. இம்முறை, பின்னல்ஆடைகளுக்கு பிரத்யேகமான அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்தாண்டு, 25 ஏற்றுமதியாளர் பங்கேற்றனர். இந்தாண்டு, 40 பேர் பங்கேற்றுள்ளனர். 'நிட்வேர்' பிரிவுக்கு பிரத்யேக அரங்கு அமைத்துள்ளதால், இனிவரும் ஆண்டுகளில் மேலும் பலர் பங்கேற்க ஆர்வம் காட்டுவர். வர்த்தகர்கள், கண்காட்சிகளை பார்த்து விசாரணை நடத்துவது குறைந்துவிட்டது; 'ஆன்லைன்' வாயிலாகவே விசாரிக்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்றால், ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.