உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது

திருவண்ணாமலையில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது

சென்னை:'திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே, அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் திட்டத்தை, ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரம் எதிரே, 6.40 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட, அறநிலைய துறை திட்டமிட்டது. பொதுப்பணி துறை, கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுவதால், கோவில் கோபுரம் மறைக்கப்படுவதாக பக்தர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளால், கோவிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், வழக்கறிஞர் ஜெகநாத், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர், சிறப்பு அமர்வில் முறையிட்டனர். இதையடுத்து, வணிக வளாக கட்டுமான பணிக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு நவம்பரில்நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி வாதாடினார். அறநிலைய துறை சார்பில் சிறப்பு பிளீடர்அருண் நடராஜன், ''வணிக வளாகம், ராஜகோபுரத்தின் பார்வையை மறைக்காது. கட்டப்படும் கடைகளில், பக்தர்கள் வசதிக்காக பூஜை பொருட்கள், பூக்கள் மட்டுமே விற்கப்படும்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இங்கே வர்த்தக நடவடிக்கைக்காக கட்டடம் வேண்டியது அவசியம் தானா என்று, கேள்வி எழுப்பினர். 'திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். திருவிழா நாட்களில், லட்சக்கணக்கில் வருகின்றனர். கோவிலின் முன் உள்ள இந்த திறந்த வெளி, பிரதான இடமாக உள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் எளிதாக சென்று வர வேண்டும். கோவிலுக்காக, தேர் நிறுத்துவதற்காக என்றால் சரி; வணிக நோக்கத்துக்கு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டுமா' என்றும் கேட்டனர்.பின், அறநிலைய துறை வழக்கறிஞரிடம், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை, ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி