தமிழக அரசு சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை, தகுதியான சிலருக்கு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அதனால் முறைப்படி ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்நிலையில், ஆக., 17 முதல் 19 வரை உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக, 'வாட்ஸாப்' வாயிலாக தகவல் பரவியது.அதனால், நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருச்சி, கோவை, கடலுார், விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், சேலம், நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் பெண்கள் முற்றுகையிட்டனர்.அங்கிருந்த பணியாளர்கள், தகவல் வெறும் வதந்தி என்றும், சிறப்பு முகாம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பெண்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். வதந்தி பரப்புவோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.நாகை, கலெக்டர் அலுவலக வாயிலில் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசின் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட அறிக்கை:மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க, கலெக்டர் அலுவலகத்தில் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடப்பதாக கூறி, 'வாட்ஸாப்'பில் புகைப்படம் ஒன்று பகிரப்படுகிறது. இது பொய்யான தகவல். அந்த தேதிகளில் சிறப்பு முகாம் எதுவும் நடக்கவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் குழு -