சென்னை : புதிய ரேஷன் கார்டு கேட்டு, 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு, இம்மாதம் முதல் மீண்டும் பயனாளி கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், புதிய கார்டுகளை விரைவாக வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர். புதிய ரேஷன் கார்டுக்கு, 'ஆதார்' எண் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் முகவரியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, 30 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் ரேஷன் கார்டுக்கு, 1.40 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 2023 செப்., முதல், 1.15 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாயை அரசு வழங்குகிறது. அத்திட்டத்திற்கு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்க, இம்மாதம் முதல் மீண்டும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகள், சில தினங்களில் துவங்கப்பட உள்ளன. அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வசதியாக, ரேஷன் கார்டை விரைவாக வழங்குமாறு, அரசுக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.