மதுரை,: மதுரை உட்பட தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன்பகை காரணமாகவும் கொலைகள் நடக்கின்றன. இதுதொடர்பான வழக்குகள், அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. தென்மண்டல ஐ.ஜி.,யாக பிரேம்ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றதும், முக்கிய வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர, எஸ்.பி.,க்களுக்கு அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து, விரைவான நீதிமன்ற விசாரணை, குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் ஐந்து வழக்குகளில், 15 பேருக்கு ஆயுள், நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.குறிப்பாக, 2022ல் மதுரை - அலங்காநல்லுார் பகுதியில் நடந்த கொலை வழக்கில், கடந்த அக்.,4ல் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடி ஜேக்கப், பிரவீன்ராஜ் உட்பட ஆறு பேருக்கு அக்., 10ல் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதே மாவட்டத்தில், முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை வழக்கில், இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை அக்.,8ல் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியில், 2014ல் ஜாதி ரீதியாக மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு துாக்கு தண்டனையும், ஐந்து பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, செப்.,24ல் திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது. துாத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில், 2013ல் நடந்த கொலை வழக்கில், மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அக்.,4ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி, தீர்வு கண்ட போலீசாருக்கு, ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார்.