வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எதற்காக கடன் வாங்க வேண்டும். ரஜினி விஜய் கமல் அஜித் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி போன்றவர்களிடம் வசூலித்தாலே இதைவிட கூட கிடைக்கும். ஏன் நாடகம்
சென்னை: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின், 69வது பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. திரையரங்குகளில், திரையிடப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு, கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டது மற்றும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்படங்களுக்கு, தமிழக அரசு விருதுகளை வழங்கும் விதமாக, விருது குழு ஒன்றை அமைத்த முதல்வர் ஸ்டாலின், சங்க உறுப்பினரும், துணை அமைச்சருமான உதயநிதி, அமைச்சர்கள் ராமச்சந்திரன், சாமிநாதன் உட்பட பலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு வரையில் நடந்த செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த, 2024 --- 25ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு, -செலவு கணக்கு அறிக்கைக்கு ஒப்புதல், சங்கம் மற்றும் சங்க உறுப்பினர் குறித்து தவறாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதுாறாகவும் தகவல்களை பதிவிடும் சங்க உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உறுப்பினர் அல்லாதவர் மீது புகார் அளிக்கவும் சங்க நிர்வாக குழுவிற்கு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய சங்க கட்டுமான பணிக்காக, 40 கோடி ரூபாய் வரை கடன் கேட்கப்பட்ட நிலையில், 25 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டது. கூடுதலாக, 10 கோடி ரூபாய் கடன் பெற ஒப்புதல் வழங்குவது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல், தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற நடிகை ஊர்வசி, நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
எதற்காக கடன் வாங்க வேண்டும். ரஜினி விஜய் கமல் அஜித் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி போன்றவர்களிடம் வசூலித்தாலே இதைவிட கூட கிடைக்கும். ஏன் நாடகம்