மேலும் 2 வந்தே பாரத் தயாரிக்கிறது ஐ.சி.எப்.,
சென்னை:மேலும் இரண்டு 'வந்தே பாரத்' ரயில்களை தயாரித்து வழங்க, ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.நவீன வசதிகள் உடைய இந்த ரயில், சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை, 70க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், கூடுதலாக வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் பயன்படுத்துவதற்காக, மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை தயாரித்து வழங்குமாறு, சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களும், தலா 20 பெட்டிகள் உடையதாக இருக்கும். இதுதவிர, வடக்கு ரயில்வேக்கு, 20 பெட்டிகள் உடைய இரண்டு ரயில்களை தயாரித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.