உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடை கால பொன்னுக்கு வீங்கி ஒரே மாதத்தில் 205 பேர் பாதிப்பு

கோடை கால பொன்னுக்கு வீங்கி ஒரே மாதத்தில் 205 பேர் பாதிப்பு

சென்னை : கோடை காலத்தில், 'மம்ப்ஸ்' என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்று அதிகரித்து, 205 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.'மம்ப்ஸ்' என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி, காய்ச்சல் ஏற்படுகிறது. அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் இருக்கும்.

பரவும்

இவ்வகை வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் வாயிலாக, மற்றவர்களுக்கும் பரவும். ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் உடலுக்குள் வைரஸ் ஊடுருவி, அறிகுறிகளை வெளிப்படுத்தும்.இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்றாலும், நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி இருந்தாலே, பாதிப்பு சரியாகும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறியதாவது:ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகையான தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில், கோடை காலத்தில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிப்பது இயல்பு.கேரளாவில், பொன்னுக்கு வீங்கி அதிகரித்து உள்ளது. அதுபோன்ற பரவல் இல்லையென்றாலும், கடந்தாண்டை விட, தற்போது, தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

பதற்றம் வேண்டாம்

இந்த மாதத்தில் மட்டும் 205 பேர் பொன்னுங்கு வீங்கி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய தடுப்பூசி அட்டவணையில், எம்.ஆர்., என்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது.அதேநேரம், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத, மம்ப்ஸ் நோய்க்கு, எம்.எம்.ஆர்., என்ற தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் இதற்கான தடுப்பூசி போடப்படுகிறது.இந்த பாதிப்புக்கு தடுப்பு மருந்துகளை காட்டிலும், நோய் எதிர்பாற்றலே பாதிப்பை சரி செய்துவிடும். எனவே, பொதுமக்கள் பதற்றம்அடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்படாதது ஏன்?

தேசிய தடுப்பூசி அட்டவணையில், தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கு மட்டுமே, மத்திய, மாநில அரசுகள் குழந்தை பருவம் முதல் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றன. அதேநேரம், தீவிர பாதிப்பு தன்மை இல்லாத, சிகிச்சை எடுத்தாலே குணமாகக்கூடிய பாதிப்புகளுக்கு, தடுப்பூசிகள் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் போடப்படுவதில்லை. அவ்வகை தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டு கொள்ளலாம். சிலருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும், நோய் பாதிப்பு ஏற்படும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ