சென்னை:லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினர், கடந்த மாதம் 19ம் தேதி முதல், விருப்ப மனுக்களை தலா, 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கிச் சென்றனர். கடந்த 1ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, தலா 50,000 ரூபாய் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவித்திருந்தது.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி மீண்டும் துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் அந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்கவில்லை. நீலகிரி தொகுதியில் போட்டியிட மீண்டும் ஆ.ராஜாவும், தென்சென்னை தொகுதிக்கு மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிட விருப்பமனு சமர்ப்பித்தனர். வடசென்னை தொகுதியில் மீண்டும் கலாநிதி வீராசாமியும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு டி.ஆர்.பாலுவும், படப்பை மனோகரனும் விருப்பமனு வழங்கி உள்ளனர்.விருப்பமனு சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால், அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் அலைமோதியது.நிர்வாகிகளின் வாகனங்கள் குவிந்ததால், அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறிவாலயம் அருகேயுள்ள டீக்கடைகள், ஹோட்டல்களில் வியாபாரம் களை கட்டியது. விருப்பமனு தாக்கல் செய்ய வந்த கட்சியினர் பலர், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்களுடன் அணி வகுத்து வந்தனர்.போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து, 2,984 பேர் மனு செய்ததுடன், பணமும் செலுத்தியுள்ளனர். விருப்ப மனுக்கள் வாயிலாக, வசூலான பணம் எவ்வளவு என்பது விரைவில் வெளியாகும் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.