மேலும் செய்திகள்
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
28-Sep-2024
மயிலம்: மயிலம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 34; இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மாருதி ஸ்விப்ட் காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஜனார்த்தனன் ஓட்டினார்.நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த விளங்கம்பாடி அய்யனார் கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது.அங்கு, சாலையில் நடந்து சென்ற விழுப்புரம் மாம்பழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான தெய்வசிகாமணி மகன் சார்லஸ், 35; மீது மோதியது. தொடர்ந்து, சென்டர் மீடியனில் ஏறி எதிர் சாலையில் புகுந்த கார், எதிரில் பைக்கில் வந்த மயிலம் அடுத்த பேரணி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், 38; பூபாலன், 45; ஆகியோர் மீது மோதியது.இந்த விபத்தில் சார்லஸ், அய்யப்பன், பூபாலன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், அய்யப்பன், பூபாலன் இருவரும் திருப்பதி சென்று, சொந்த ஊர் திரும்பியவர்கள், கூட்டேரிப்பட்டு வரை பஸ்சில் வந்தனர். அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.காரில் வந்த ஜனார்த்தனன் மற்றும் அவரது குடும்பத்தினர் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Sep-2024