| ADDED : ஜன 23, 2024 05:38 AM
சென்னை : சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் குடும்ப உறுப்பினர் களுக்கு சொந்தமான, 450 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் 33 லட்சம் ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு, 'ஓசன் லைப்ஸ்பேஸ் இந்தியா' என்ற கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர் பீட்டர் மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இரு தினங்களுக்கு முன், சென்னையில், கோட்டூர்புரம், கே.கே.நகரில் உள்ள, பீட்டரின் வீடு மற்றும் இவர் தொடர்பான ஏழு இடங்களில் சோதனை நடத்தினர்.அப்போது, பீட்டர் மற்றும் இவரது மனைவி அனிதா பாய் உள்ளிட்டோர், 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்களின் வீடுகளில், 33 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.