உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த ஆண்டு காசநோயால் 75,800 பேர் பாதிப்பு

இந்த ஆண்டு காசநோயால் 75,800 பேர் பாதிப்பு

சென்னை ; தமிழகத்தில் இந்த ஆண்டில், 75,800க்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் காசநோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் என, காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. காசநோயாளிகள் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படுவதுடன், தேவைப்படுவோரின் வீடுகளுக்கே சென்று சளி மாதிரி, ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதனால், 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணமடைகின்றனர்.இந்தியாவில் காசநோயால், 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், 75,800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோயால் பாதிக்கப்படுவோரை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காசநோய் பாதிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, பலர் முதல்முறை சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர். ஒரு சிலர் முறையான சிகிச்சை பெறாததாலும், மருந்துகள் எடுத்துக் கொள்ளாததாலும், தாமதமாக கண்டறிவதாலும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தடுக்க, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு, காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி