உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமண பதிவுக்கு காத்திருக்கும் 898 இலங்கை அகதி தம்பதி ஒரே நாளில் பதிய முடிவு

திருமண பதிவுக்கு காத்திருக்கும் 898 இலங்கை அகதி தம்பதி ஒரே நாளில் பதிய முடிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், 898 தம்பதியர் திருமண பதிவுக்காக, கடந்த ஏழாண்டுகளாக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரே நாளில் பதிவு செய்து முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், 16 இடங்களில், இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிப்போருக்கு அடிப்படை வசதிகளை, தமிழக அரசு செய்து கொடுக்கிறது.

உதவிகள்

குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பு, வீட்டுவசதி போன்றவற்றுக்கு தேவையான உதவிகளை, தமிழக அரசே செய்து கொடுக்கிறது. இந்த முகாம்களில் வசிப்போர், தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் போது, உரிய ஆவணங்களை அளித்து, சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். கடந்த, 2018 முதல் பத்திரப்பதிவு பணிகள், 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. திருமண பதிவு உள்ளிட்ட பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் போது, அதில் இலங்கை அகதிகள், திருமண பதிவுக்கான விபரங்களை உள்ளீடு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், 2018 முதல், இலங்கை அகதிகளுக்கான திருமண பதிவு பணிகள் முடங்கின.இது தொடர்பாக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், பதிவுத்துறைக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில், பதிவுத்துறை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. https://x.com/dinamalarweb/status/1946387114205257830

16 முகாம்கள்

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: இணையதளம் வாயிலாக திருமண பதிவுகள் மேற்கொள்ளப்படுவதில், இலங்கை அகதி முகாம் தம்பதியர் விடுபட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 16 முகாம்களில், 898 தம்பதியர் பதிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போதுள்ள இணையதள வழிமுறையில், இவர்களுக்கான திருமண பதிவுகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. இதற்காக, வரும் 26ம் தேதி சம்பந்தப்பட்ட, 41 சார் - பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும். சிறப்பு நிகழ்வாக கருதி, இவர்களுக்கான திருமண பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இதில் மணமக்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், ஹிந்து திருமண பதிவு சட்டத்தின் கீழும், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பின், சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் கீழும், இவர்களது திருமணத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை