உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் வரை சென்று பேடிக்கு திரும்பி வந்த தாடி விவகாரம்

காஷ்மீர் வரை சென்று பேடிக்கு திரும்பி வந்த தாடி விவகாரம்

சென்னை:செங்கல்பட்டு அரசு செவிலியர் கல்லுாரியில் செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களை தாடியை எடுக்கச் சொன்னது, காஷ்மீர் வரை எதிரொலித்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.செங்கல்பட்டு அரசு செவிலியர் கல்லுாரியில், 206 மாணவ - மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 16 மாணவர்கள் படிக்கின்றனர்.

கோரிக்கை

மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இருப்பதால், அனைவரும் தாடியை 'ஷேவ்' செய்துவிட்டு வருமாறு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன், ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள மாணவர் சங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களை தாடியை எடுக்கச்சொல்லி கல்லுாரி நிர்வாகம் நிர்ப்பந்திப்பதாக கூறியுள்ளனர்.இதையடுத்து, 'டுவிட்டரில்' தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ஆகியோரை 'டேக்' செய்து, ஜம்மு - காஷ்மீர் மாணவர் அமைப்பினர், பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.அதில், 'தாடி வளர்ப்பது தனிநபரின் அடிப்படை சுதந்திரம். எந்தவொரு மாணவரையும் பாகுபாட்டிற்கு உட்படுத்தக்கூடாது. இவை, மாணவர்களை ஒதுக்கிவைக்கும் சூழலை உருவாக்குகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தனர்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர் கூறியதாவது:மாணவர்களை தாடியை எடுக்கச் சொல்வதில் காழ்ப்புணர்ச்சி இல்லை. தேர்வு விதிமுறைப்படியே அனைத்து மாணவர்களையும் தாடியை எடுக்கக் கூறினோம். யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. கடந்த வாரம் எழுத்து தேர்வு நிறைவு பெற்ற நிலையில், செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

கட்டாயப்படுத்தவில்லை

தேர்வு விதிப்படி, தலைமுடி மற்றும் தாடியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. செய்முறை தேர்வில் மாணவர்கள் நேரடியாக நோயாளிகள் மற்றும் பொதுமக்களை பார்ப்பதால், சுத்தமாக இருப்பது அவசியம். அதனால், மாணவர்களை தாடியை எடுக்கச் சொன்னோம். ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். யாரையும் தாடியை எடுக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மதம், ஆடை கலாசாரங்களில் தலையிட கல்லுாரிகளுக்கு தடை

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:தேர்வு நடப்பதை ஒட்டி, மருத்துவ மாணவர்களின் ஆடை விவகாரத்தில், மாணவர்கள் நன்னடத்தையை பின்பற்றுதல், கை, கால்களை சுத்தமாக பராமரித்தல், தாடியை 'ஷேவ்' செய்தல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, வழக்கமான அறிவுரை தான். யாருக்கும் கட்டாயமில்லை. இது குறித்து தகுந்த விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, அவர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் மதம், கலாசார விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை