UPDATED : பிப் 25, 2024 08:08 AM | ADDED : பிப் 25, 2024 08:05 AM
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சர்க்கார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை இரண்டு மாத குட்டியுடன், தாய் யானை உணவு தேடி சென்றபோது, மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவில் உள்ள காண்டூர் கால்வாயில், குட்டி யானை தவறி விழுந்தது. குட்டியை மீட்க தாய் யானையும் காண்டூர் கால்வாயில் இறங்கி நீண்ட நேரம் போராடியது.மீட்க முடியாததால் தாய் யானை பிளிறி அபாய குரல் எழுப்பவே, பழங்குடியின மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.வனத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி, குட்டியை பாதுகாப்பாக மீட்டு கரையில் விட்டனர். தாய் யானை, குட்டியை அரவணைத்து, தும்பிக்கையால் அணைத்துக் கொண்டது.வனத்துறையினருக்கு நன்றி சொல்லும் விதமாக தும்பிக்கையை துாக்கி காண்பித்து விட்டு, குட்டியுடன் வனத்துக்குள் சென்றது.