உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் சாகசம் மின்கம்பத்தில் மோதியதால் மாணவர் காயம்

ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் சாகசம் மின்கம்பத்தில் மோதியதால் மாணவர் காயம்

சென்னை: இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வெளியிடுவதற்காக, ஓடும் மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி சாகசம் செய்த தனியார் கல்லுாரி மாணவர், மின்கம்பம் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உசுப்பேற்றினர்

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவர், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லுாரியில், ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி கல்லுாரி முடிந்து, திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பெரம்பூருக்கு தன் நண்பர்களுடன் சென்றார். அப்போது, இவர் மட்டும் படியில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார். அதைப் பார்த்த நண்பர்கள், உன் சாகசத்தை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிடலாம் என்று உசுப்பேற்ற, ரயிலில் தொங்கியபடி ஆட்டமும் போட்டுள்ளார். உடல் முழுவதையும் வெளியே நீட்டுவதும், பின் உள்ளே இழுப்பதுமாகவும் இருந்துள்ளார். இதை, அவரின் நண்பர்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். குதுாகலத்தில் மெய் மறந்து பயணம் செய்த அந்த மாணவர், தன் முதுகு பக்கத்தை சற்று வளைந்து காட்ட, ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே ரயில் சென்ற போது, திடீரென மின் கம்பத்தில் மோதி துாக்கி வீசப்பட்டார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடன், அவரின் நண்பர்கள் செய்வதறியாது தவித்தனர். 'செத்துட்டாண்டா' என்று கத்திக் கூச்சலிட்டனர். அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றதும் இறங்கி ஓடிச்சென்று கீழே விழுந்த மாணவரை பார்த்தனர். அவர் சுயநினைவு இன்றி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தேறி வருகிறார்

ரயில்வே போலீசார், அந்த மாணவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 'தெரியாமல் தவறு செய்து விட்டேன்' என்று டாக்டர்களிடம் மாணவர் கதறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jebamani Mohanraj
அக் 14, 2024 13:58

மாணவன் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை எல்லா ரயில் நிலையங்களிலும் ஒளி பரப்பவேண்டும் பசங்கள் சாகசம் குறையும்