உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை

 உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பிரமீளா. இவர், ஜார்ஜ் டவுன் அய்யாசாமி முதலி இரண்டாவது சந்து பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகள் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாலை ஆக்கிரமிப்பை ஆறு மாதங்களுக்குள் அகற்றும்படி, கடந்தாண்டு மார்ச் 5ல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றவில்லை என, பிரமீளா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ''எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். அப்போது, மாநகராட்சி தரப்பில், 'ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஐந்து முறை போலீசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்காததால், ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு காவல் துறை தரப்பில், 'மாநகராட்சி தரப்பில் எழுதப்பட்ட கடிதம் தெளிவாக இல்லை' என, பதில் அளிக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசின் இரு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால், அது பொது மக்களை பாதிக்கும். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நிர்வாகத்தின் அடிப்படை. எனவே, இந்த வழக்கில் உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோரை தாமாக முன்வந்து இணைக்கிறோம். நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஜனவரி 5ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை