உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு உடைக்கிறார் நடிகர் விஜய்

தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு உடைக்கிறார் நடிகர் விஜய்

மாமல்லபுரம்: ''அரசியல் பதவிகளால் பண்ணையாராக மாறியவர்களை, அரசியலிருந்தே விரட்ட வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆவேசப்பட்டார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் தனியார் அரங்கில் நடந்தது. 'கெட் - அவுட்' என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது:அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்பதை கேள்விப்பட்டுள்ளோம். அரசியலுக்கு யாரும் வரலாம்; அது ஜனநாயக உரிமை. மக்கள் விரும்பும் ஒருவன் அரசியலுக்கு வந்தால், நல்ல முறையில் தான் வரவேற்பர்.ஒரு சிலருக்கு எரிச்சல் வரும். நாம் சொன்ன பொய்யை நம்பி, மக்கள் ஓட்டு போட்டார்களே. ஆனால், இவன் சொல்வது மக்களுக்கு நெருக்கமாக உள்ளதே என்று குழப்பம் ஏற்படும். வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறானே என்றும் பேசுவர். ஆட்சியில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவர். இப்படிப்பட்ட அரசியல் களத்துல பயம், பதற்றம் இல்லாமல், எதிர்ப்பை இடது கையால் புறந்தள்ளி, த.வெ.க.,வின் இரண்டாம் ஆண்டு துவங்கி உள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கியபோது, இளைஞர்கள் தான் அவர்களுடன் இருந்தனர். அதனால் தான் அவர்களுக்கு, 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது.த.வெ.க., எளிமையான மக்கள் கட்சி. நிர்வாகிகளும் அப்படித் தான் இருப்பர். இது பண்ணையார் கட்சியல்ல. முற்காலத்துல பண்ணையார்கள் கட்சியில் இருப்பர். இப்ப பதவிகளில் உள்ளோர் பண்ணையாராக மாறி விடுகின்றனர்.மக்கள், நாட்டு நலன் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல், பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படும் பண்ணையார்களை, அரசியலிலிருந்தே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக ரீதியில் அணுகவே, 2026 தேர்தலை சந்திக்கிறோம். எந்தக் கட்சிக்கும் த.வெ.க., சளைத்ததல்ல.இப்போது, மும்மொழி கொள்கை பிரச்னை எழுந்துள்ளது. இதை அமல்படுத்தாவிட்டால், மத்திய அரசு, மாநில அரசிற்கு கல்வி நிதி அளிக்காதாம். நிதி அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பெற வேண்டியது மாநில அரசின் உரிமை. பா.ஜ., - தி.மு.க.,வைச் சேர்ந்தோர், தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, 'டிராமா' போட்டு, மக்களை ஏமாற்றுகின்றனர். பா.ஜ.,வினர் அடிக்கிற மாதிரி அடிப்பராம்; தி.மு.க., அழுகிற மாதிரி அழுமாம். அதை நாட்டு மக்கள் நம்பணுமாம். இவ்வாறு அவர் பேசினார்.விழா நடந்த இடத்தில், புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட அவலங்களை, 'கெட் அவுட்' செய்ய உறுதியேற்போம் என்ற வாசகத்துடன் அமைந்த பதாகையில், விஜய் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கினார்.ஹிந்திக்கு எதிரான விஷயம் என்பதால், வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பதாகையில் கையொப்பமிடாமல் ஒதுங்கினார்.கட்சியை நடத்துவது யார்?இந்நிகழ்ச்சியில் பேசிய பிரஷாந்த் கிஷோர், த.வெ.க.,வுக்கு அடுத்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு தொண்டரும் தலா 10 பேரை சேர்க்க வேண்டும் என, உத்தரவிட்டார். இது கட்சியை நடத்துவது விஜய்யா அல்லது பிரஷாந்த் கிஷோரா என்ற கேள்வியை எழுப்புகிறது.நிகழ்ச்சியில் பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், ''கிரிக்கெட் வீரர் தோனி, தமிழகத்தில் மிகவும் பிரபலமானவார். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன், த.வெ.க., வெற்றி பெற்றால், தோனியை விட தமிழகத்தில் நான் பிரபலமாகி விடுவேன். தமிழகத்தில் ஊழல், வகுப்புவாதம், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு த.வெ.க.,வின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டர்களும், அடுத்த மூன்று மாதங்களில் 10 பேரை, கட்சியில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.

'வெற்றி விழாவில் தமிழில் பேசுவேன்!

'தமிழகம், மேற்கு வங்கம் தேர்தலுக்கு பின், தேர்தல் வியூகம் செய்யாமல் இருந்தேன். தமிழகம் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை போல், ஊழலிலும் உள்ளது. லஞ்சம், வாரிசு அரசியல் இல்லையெனில், தமிழகம் மேலும் வளரும். தமிழகத்தில் உள்ளோர், மத அரசியலை வேரூன்ற விட மாட்டார்கள். இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் எம்.எல்.ஏ.,க்கள் ஆக்கப்படுவர். தமிழை கற்க, பேச முயற்சிப்பேன். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்ததும் நடக்கும் வெற்றி விழாவில், தமிழில் பேசுவேன்.- பிரஷாந்த் கிஷோர், வியூக வகுப்பாளர்.

ஆடம்பர சொகுசு விடுதியில் நிகழ்ச்சி:இது ஏழைகளுக்கான கட்சி என பேச்சு

த.வெ.க., இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள, 'போர் பாயின்ட் ஷெரட்டன்' சொகுசு விடுதியில், நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது, ''இது ஏழைகளுக்கான கட்சி,'' என்றார். ஆனால், பல லட்சம் ரூபாய் வாடகை பெறப்படும் பிரமாண்ட அரங்கில் நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமின்றி, விஜய்க்கு வரவேற்பு அளிக்கும் வகையில், சாலை முழுதும் ஆங்காங்கே கட்சியினர் பேனர்கள், பிரமாண்ட கொடிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட, 4,500 பேருக்கு சைவ உணவு பறிமாறப்பட்டது. இதில், கேரட் அல்வா, மசால் வடை, காலி பிளவர் ரோஸ்ட், பூரி, வெஜ் குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், சாம்பார், ரசம், மோர், சவ்சவ் கூட்டு, கேரட், பீன்ஸ் பொரியல், பீன்ஸ் பருப்பு கூட்டு, புரூட் சாலட், வாழை பழம், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஊறுகாய், தண்ணீர் பாட்டில் பறிமாறப்பட்டன. இந்த கொண்டாட்டத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், 'த.வெ.க., ஏழைகளுக்கான கட்சி என்று சொல்வது முரண்பாடாக உள்ளது' என அக்கட்சி தொண்டர்களே பேசுகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில், 200க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களிடம் கெடுபிடியாக நடந்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள் செல்ல முயன்ற பத்திரிகை புகைப்படக்காரரை பவுன்சிலர்கள் நெஞ்சில் குத்தியதில் அவர் கீழே சரிந்தார். பின், அவர் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூரிலேயே விலை போகாதவர்!

'நடிகர் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், பிரசாந்த் கிஷோர் பேசப் போகிறார்' என்று. அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரஷாந்த் கிஷோர் என சொன்னார்கள். தனி இயக்கம் கண்டு, பீஹாரில் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டிபாசிட் பறிபோனது. அப்படிப்பட்டவர்தான், தமிழ்கம் வந்து, இங்கிருப்போருக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார். அதை வைத்து வெற்றி பெற முடியுமா?ஏற்கனவே, தி.மு.க.,வுக்காக பணியாற்றினார். வியூகமெல்லாம் வகுத்துக் கொடுத்தார்; ஆனால், தி.மு.க., சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து தி.மு.க.,வுக்காக பணியாற்ற வாய்ப்பில்லாததால், மாற்று கட்சிக்காக பணியாற்ற சென்று விட்டார். யாரை எப்படி எதிர்கொள்வது என்பது, தமிழக முதல்வருக்கு தெரியும். தி.மு.க.,வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, எங்களுக்கு அவர் ஒருவர் போதும். நேரு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karupanasamy
பிப் 27, 2025 01:29

இந்தப்பய தான் விஜயகாந்தமாதிரி ஆகிடலாம்னு நினைக்கிறான் விஜயகாந்த் எல்லோரிடமும் உண்மையாக இருந்தவர். இவனுடைய ஆரம்பமே பிராடு பொய் பித்தலாட்டத்துலதான் தொடங்கியது வருமான வரி செலுத்தாமல் இருக்க வருமானத்தை மறைத்து பின் அபராதத்துடன் கூடிய நீதிமன்ற எச்சரிக்கையுடன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். இவன் நடத்தும் விஜய் வித்யாஸ்ரமம் பள்ளிக்கூடத்தில் சிபிஎஸ்யீ சிலபஸ் அதாவது தமிழ் ஹிந்தி ஆங்கிலம் இவனுடைய மகன் படித்தது ஆங்கிலவழி கான்வென்டில் சிபிஎஸ்யீ பாடத்திட்டத்தில் ஹிந்தியும் சேர்த்து, இவன் தீயமுகாவின் டூப்ளிகேட் பிரதி. இவனுடைய ரசிகர்கள் பஞ்சாயத்து பள்ளிகளில் ஆனால் இவனுடைய வாரிசுகளோ ஆங்கிலவழி கான்வென்டில் பெற்றோர்களே உசார் உங்கள் பிள்ளைகள் இவனுக்கு ரசிகர் அல்லது போஸ்டர் ஓட்டியாக இருந்தால் திருத்துங்கள். 2026 தேர்தலுடன் இவனை அப்புறப்படுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை