அடுக்குமாடி வீடுகள் சட்ட விதி அமல்படுத்த கூடுதல் அவகாசம்
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்ட விதிகளின் கீழ், வீட்டு உரிமையாளர் சங்கங்களை சேர்ப்பதற்கான அவகாசம், இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு வாங்குவோரின் நலன்களை பாதுகாக்க, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டம், 2022ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள் அறிவிக்கப்படாததால், இந்த சட்டம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இதற்கான விதிமுறைகள், 2024 செப்., 24ல் வெளியிடப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர் தங்களுக்குள் ஏற்படுத்தும் சங்கங்களை, இனி இந்த புதிய சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள சங்கங்களையும், இந்த புதிய சட்டத்தின் கீழ் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்படி, ஏற்கனவே பதிவான வீட்டு உரிமையாளர் சங்கங்களை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க முதலில், 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. விதிமுறைகள் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால், இதற்கான அவகாசம் ஓராண்டாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பெரும்பாலான சங்கங்கள் இன்னும் இதன் கீழ் வராமல் இருப்பதை கருத்தில் வைத்து, இதற்கான அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அவகாசத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.