உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

முகூர்த்த நாளான நேற்று, அ.தி.மு.க., மாநில நிர்வாகி கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டார். 41 பேர் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட, ஆறு பேர் புதுமுகங்கள். அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2014 அக்டோபர் 29ல், பொதுச்செயலர் தேர்தல் நடந்தது. அதில், கட்சியின் பொதுச்செயலராக ஏழாவது முறையாக, முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 14 கட்டமாக நடந்த உட்கட்சி தேர்தல், ஏப்ரலில் நிறைவடைந்தது. அதன்பின், மாவட்ட செயலர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் நேற்று, கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதில், பொதுச்செயலர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாவும், அவைத் தலைவர் பதவிக்கு மதுசூதனனும், பொருளாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு செயலர்களாக, 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், நாமக்கல் ராஜு, குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம், நாகப்பட்டினம் எம்.பி., கோபால், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., வளர்மதி, துாத்துக்குடி எம்.பி., ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி உள்ளிட்ட ஆறு பேர் புதுமுகங்கள். பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செம்மலை, கோகுல இந்திரா, ஏ.கே.செல்வ ராஜ் ஆகிய ஐந்து பேருக்கும், மீண்டும் அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைப்பு செயலர்களாக இருந்த பி.எச்.பாண்டியன், ஆதி ராஜாராம் ஆகியோருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம், பழனியப்பன், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு செயலராக இருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டார். அதனால், அவர் வகித்த தேர்தல் பிரிவு செயலர் பதவி, உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சமூகத்தவரும் இடம்பெறும் வகையில் கட்சிப் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டு உள்ளன.

வளர்மதிக்கு பதவி ஏன்?

புதுக்கோட்டையில், முத்தரையர் இனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினர் சிலரை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தவறாகப் பேசியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த இருவர், பொய் புகார் கொடுத்ததாக, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அது, அந்த சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியை போக்கும் வகையிலும், அந்த சமூகத்தினரை சமாதானப்படுத்தும் விதமாகவும், முத்தரையர் இனத்தைச் சேர்ந்த, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., வளர்மதியை, கட்சியின் அமைப்பு செயலராக ஜெயலலிதா நியமித்துள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்