| ADDED : பிப் 11, 2024 12:04 AM
சென்னை:வேளாண் பட்ஜெட் தொடர்பாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, நேற்று வேளாண் துறை சார்பில், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.வரும் நிதியாண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தயாரிப்பதற்காக, இரண்டு முறை சென்னை தலைமை செயலகத்திலும், கடந்த 6ம் தேதி தஞ்சாவூரிலும், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.நேற்று சென்னையில், டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற மாவட்டங்களின் விவசாயிகளிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேளாண்மை இயக்குனரகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து, வேளாண் துறை செயலர் அபூர்வா உரையாற்றினார்.கூட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும், வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து, அதன்படி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 19 கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளின் 548 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயிகள் நலனுக்கு தேவைப்படும் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் கருத்துகளை அரசு ஆராய்ந்து, 2024 - 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தயார் செய்யும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.