ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) வாயிலாக குறிப்பிட்ட தகவல்களைப் பெற வேண்டும் என்றால், எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும்? அது பற்றியச் சுருக்க விளக்கத்தை இங்கே தருகிறேன். ஏஐ வாயிலாகத் தகவல் பெற விரும்புவோர் முதலில் செய்ய வேண்டிய பணி ப்ராம்ட் தெரிவு செய்வது.பிராம்ட் என்றால் என்ன?
என்ன தகவலை நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அந்த தகவலைப் பெறுவதற்குரிய சரியான வார்த்தைகளைக் கொண்ட கேள்வியைத் தான் ஏஐ செயலியிடம் நீங்கள் கேட்க வேண்டும்.உங்கள் கேள்வி தெளிவாகவும் நேரடியாகவும் சந்தேகம் இல்லாத வார்த்தைகளைக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலி புரிந்து கொண்டு, அதற்குரிய சரியான பதிலை ஏஐ தொழில்நுட்பம் தெரிவிக்கும். குழப்பும் படியான கேள்வியை நீங்கள் கேட்டாலோ, பதில் சொல்வதற்கு இயலாதது போன்ற கேள்விகளைத் தொடுத்தாலோ செயலி குழம்பி விடும். செயலியை முட்டாளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கேள்வி கேட்கக் கூடாது. பதிலைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் கேட்க வேண்டும். பிராம்ட் என்ற சொல்லுக்கு இதுதான் விளக்கம்.அடுத்த கட்டம் என்ன?
நீங்கள் என்ன துறையைப் பற்றி கேள்வி கேட்கிறீர்களோ அந்த துறையின் சிறந்த நிபுணர் என்று உருமாறிடுக என ஆணையிட வேண்டும். விட்டலாச்சார்யா பட மந்திரவாதி போல் தெரிந்தாலும், இதைத்தான் செயலியும் உங்களிடம் எதிர்பார்க்கிறது. விட்டலாச்சாரியா படங்களில் மந்திரவாதி தன் மந்திரக் கோலை எடுத்து, புரியாத மொழியில் ஏதோ சொல்லுவார். உடனே பறக்கும் கம்பளம் வந்து இறங்கும். சம்பளம் வாங்காமலேயே வேலை செய்யும் கம்பளம் அது. மந்திரவாதி அமர்ந்து கொள்வார். அந்த கம்பளம் அவர் விரும்பும் இடத்தில் கொண்டு அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும். மந்திரவாதி கம்பளத்தை விட்டு இறங்கியவுடன்,' நீ என் வேலைக்காரனாக மாறக் கடவாயாக' என்று உத்தரவிடுவார். இந்த மந்திரக் கம்பளம், மந்திரவாதியின் உதவியாளர் என மாறி உரிய ஒத்தாசைகளைச் செய்து கொண்டே இருக்கும்.இவையெல்லாம் நிகழ் காலத் தலைமுறைக்கு ஒவ்வாதவை. கனவில் மட்டுமே நடக்கக் கூடியவை. கற்பனையில் மட்டும் சிந்தித்துப் பார்க்கக் கூடியவை. குழந்தைகளுக்கு விளையாட்டுக் கட்டுவதற்காகச் சொல்லப்படுபவை எனும் காலமெல்லாம் மறைவு எய்தி விட்டது. இவை எல்லாவற்றையும் மெய்ப்பித்துக் காட்டுகிறது ஏஐ. கேட்கின்ற கேள்வியின் நேரடியான அர்த்தம் என்னவோ அதற்குரிய பதிலைத் தான் ஏஐ கொடுக்குமே ஒழிய, நீங்கள் என்ன யூகித்துக் கொண்டு அந்த கேள்வியைக் கேட்டிருக்கிறீர்களோ, அத்தகைய யூகத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி ஏஐ தொழில்நுட்பத்திற்குக் கிடையாது. ஆகவே உங்கள் எண்ணத்தை முழுமையாகப் பிரதிபலிக்கக் கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, உங்கள் கேள்வியைத் தொடுக்க வேண்டும்.உங்கள் கேள்வியானது திரைப்படத் துறையில் ரஜினிகாந்த்தின் சினிமா பங்களிப்புத் தொடர்பான ஒரு கேள்வி என வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விக்கான ப்ராம்ட் வாசகத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். செய்த பிறகு செயலிக்கு உத்தரவிட வேண்டும். 'தமிழ்த் திரைப்பட உலகின் செய்திகள் எழுதக்கூடிய முதுபெரும் செய்தியாளராக உன்னை உருப் படுத்திக் கொள்வாயாக!' என்று ஆணையிட வேண்டும். இவ்வாறு பதிவிட்டதும் அத்தகைய அனுபவமும் அறிவாற்றலும் கொண்ட முதுபெரும் செய்தியாளராகச் செயலி தன்னை உருவாக்கிக் கொள்ளும்.அதன் பின்னர் இந்தக் கேள்விக்கான பதிலைக் கட்டுரையாக வேண்டுமா, இலக்கியப் படைப்பாக வேண்டுமா, பட்டியல் இட்டபடி வேண்டுமா, தமிழ்க் கவிதையாக வேண்டுமா, ஆங்கிலக் கவிதையாக வேண்டுமா, புல்லட் பாயிண்ட் என்று கூறப்படும் சிறு சிறு வாக்கிய வடிவில் தனித்தனியே தொகுத்துக் கொடுக்க வேண்டுமா என்பது பற்றிய ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்.அதன் பின்னர் பாருங்கள்... கேள்வியின் கடைசி வார்த்தை முடிந்து போவதற்கு முன்னதாகவே, பதில் தரும் தகவல் படைப்புத் தொடங்கிவிடும். நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். அவ்வளவு தகவல்களையும் தர ஓரிரு நொடிகளிலேயே இந்த செயலியால் எப்படி முடிகிறது? இத்தகைய ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்.ஏஐ தொழில்நுட்பம், கேள்வி கேட்ட மாத்திரத்தில் பதில் தரத்தக்க திறன் கூடியவனாகச் செயலி தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அந்தத் துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் நொடிகளுக்குள்ளையே தனக்குள் உட்கிரதித்துக் கொள்கிறது. இவற்றில் இருந்து பதிலைத் தேடித் திரட்டி, எடுத்து, நமக்கு அடுத்த வினாடியே விளக்கம் கொடுக்கத் தொடங்கி விடுகிறது.