பழனிசாமியை பேச விடாமல் மைக் துண்டிப்பு சட்டசபையில் அ.தி.மு.க., வெளிநடப்பு
சென்னை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பேச வாய்ப்பளிக்காமல், 'மைக்' துண்டிக்கப்பட்டதால், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், சட்டத்துறை மானிய கோரிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக காலை, 9:30 மணிக்கு சபை கூடியது. கேள்வி நேர விவாதம் நடந்து முடியும் தருவாயில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சபைக்கு வந்தார். ஒரு பிரச்னை குறித்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். முதல்வர் பேசி முடித்ததும் அனுமதி தருவதாக சொன்னார். இதையடுத்து, பழனிசாமி தன் இருக்கையில் அமர்ந்தார். முதல்வர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எழுந்து, ''பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என, சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டார். வாய்ப்பில்லை
அதற்கு அப்பாவு, ''இந்த பிரச்னை குறித்து, ஏற்கனவே சபையில் கேட்கப்பட்டு பிரச்னை முடிக்கப்பட்டு விட்டது. மீண்டும் பேசுவதற்கு வாய்ப்பில்லை,'' என மறுத்தார். இதனால், ஆவேசம் அடைந்த பழனிசாமி, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''பழனிசாமிக்கு பேச வாய்ப்பு தரக்கூடாது,'' என்றார். பழனிசாமி பேசும் போது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, பழனிசாமி பேசுவதற்கு, 'மைக்' தர வேண்டும் என்று கோஷம் போட்டனர்.இதனால், சபையில் திடீர் பரபரப்பு எழுந்தது. நீண்ட நேரம் கேட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்னை அல்லது நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு வாய்ப்பு தருவதாக, சபாநாயகர் கூறினார். ஆனால், குறிப்பிட்ட சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டு பழனிசாமி நின்றிருந்தார். கோஷம்
சபாநாயகர் அனுமதி வழங்காததால், சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக, பழனிசாமி கூறினார். அவருடன் அ.தி.மு.க.,வினர் வெளியேறினர். சபை வளாகத்திற்குள் கோஷங்களை எழுப்பியபடி, எம்.எல்.ஏ.,க்கள் நின்றனர். அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் கூறினார்இதையடுத்து, கோட்டை நுழைவாயிலில் நின்றபடி பழனிசாமி உள்ளிட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.