தொடர் விடுமுறை எதிரொலி எகிறியது விமான கட்டணம்
சென்னை:சுத்நதிர தினம் மற்றும் வார விடுமுறை தொடர்ந்து வந்ததால், விமான கட்டணம் 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்தது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை. தொடர் விடுமுறை காரணமாக, ரயில்கள் மற்றும் பஸ் களில், மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. அவற்றில் டிக்கெட் கிடைக்காதவர்கள், விமானத்தில் பயணம் செய்தனர். இதன் காரணமாக, நேற்று விமான டிக்கெட் விலை, பல மடங்கு உயர்ந்தது. தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி, டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் விமானங்களிலும், கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. பயணியர் வருகை மற்றும் கூடுதல் விமானங்களை இயக்க 'ஸ்லாட்' பெறுவது போன்ற காரணங்களுக்காக, விமான கட்டணம் அதிகரித்துள்ளது என, விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.