உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திரா மணல், எம்-சாண்ட்டுக்கு கிராக்கி குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம்

ஆந்திரா மணல், எம்-சாண்ட்டுக்கு கிராக்கி குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம்

சென்னை:தமிழகத்தில், 'எம் - சாண்ட்', கருங்கல் ஜல்லி விலை உயர்வு காரணமாக, ஆந்திராவில் இருந்து வரும் மணல், எம் - சாண்ட், ஜல்லி போன்றவற்றை வாங்கவே, கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தில் குவாரிகள் செயல்படாததால், கடந்த சில மாதங்களாக, ஆற்று மணல் கிடைப்பதில்லை. இதேபோன்று, எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் இருந்து ஆற்று மணல், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக புகார் கூறப்படும் நிலையில், அதற்கு மாறாக, ஆந்திராவில் இருந்து கட்டுமானப் பொருட்கள் தமிழகத்துக்கு வரத் துவங்கியுள்ளன.

விலை உயர்வு

கருங்கல் குவாரி உரிமையாளர்கள், 'கிரஷர்' உரிமையாளர்கள் சங்கம், தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு யூனிட் எம் - சாண்ட், 6,000 ரூபாய்; பி - சாண்ட், 7,000 ரூபாய்; கருங்கல் ஜல்லி, 5,000 ரூபாய் என, விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், கட்டுமான செலவு உயர்வதுடன், வீட்டின் விலையும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகளை முடிப்பதும், விலை உயர்வால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் திருப்பதி, நெல்லுார் மாவட்டங்களில் இருந்து, ஆற்று மணல், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவை, குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள விலையை விட, குறைந்த விலைக்கு ஆந்திராவில், மணல், எம் - சாண்ட் போன்ற பொருட்களை வாங்க முடிகிறது என, கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர்.

விலை நிலவரம்

தமிழகத்தில், ஒரு யூனிட் ஆற்று மணலின் குறைந்தபட்ச விலை, 14,000 ரூபாயாக உள்ள நிலையில், ஆந்திராவில், 8,000 ரூபாய்க்கு மணல் கிடைக்கிறது. இதேபோன்று தமிழகத்தில், 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு யூனிட் எம் - சாண்ட், ஆந்திராவில், 1,400 ரூபாய்க்கு கிடைக்கிறது. தமிழகத்தில், 5,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி, ஆந்திராவில், 1,200 ரூபாய்க்கு கிடைப்பதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர். இதில், மொத்தமாக, 10 யூனிட் ஒரு லோடு என்ற அடிப்படையில் வாங்கும் போது போக்குவரத்துக்காக, 5,000 ரூபாய் கூடுதல் செலவாகிறது. தமிழகத்தில் ஒரு யூனிட் என்பது, 100 கன அடி என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது, ஆந்திராவில் ஒரு டன் என, கணக்கிடப்படுகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து, தமிழக மணல், எம் - சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல கூட்டமைப்பு தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஆந்திராவில் திருப்பதி மற்றும் நெல்லுார் மாவட்டங்களில் இருந்து, தமிழகத்துக்கு தேவையான ஆற்று மணல், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி வருகிறது. எவ்வித தடையும் இன்றி, பெரிய லாரிகள் வாயிலாக இவை கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் அபரிமிதமான விலை உயர்வால், கட்டுமான நிறுவனங்கள், ஆந்திராவில் இருந்து மொத்தமாக இப்பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களின் தேவை, இதன் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி, எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரி மற்றும் கட்டணங்களை காரணமாகக் கூறி, குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி உள்ளனர். இந்த விஷயத்தில் பேச்சு நடந்தது குறித்தும், விலை உயர்வுக்கு அனுமதி அளித்தது குறித்தும், அரசிடமிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வராதது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ