உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கங்கைகொண்டசோழபுரத்தில் அன்னாபிஷேகம் கோலாகலம்

கங்கைகொண்டசோழபுரத்தில் அன்னாபிஷேகம் கோலாகலம்

அரியலுார்: ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய லிங்கம் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. அரியலுார் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னங்களில் ஒன்றாக, உலகமே வியக்கும் கட்டட கலைக்கு சான்றாகவும் இக்கோவில் திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, கங்கைகொண்டசோழபுரத்தில் அன்னாபிஷேக விழா, நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கமாக கருதப்படும் பிரகதீஸ்வரர் சுவாமிக்கு, 75 மூட்டைகளில், 1,950 கிலோ அரிசியில் அன்னாபிஷேம் நடந்தது. இதற்காக, மெகா சைஸ் குக்கரில் சாதம் தயாரிக்கப்பட்டு, சிவாச்சாரியர்கள் மூலம் கூடையில் சுமந்து செல்லப்பட்டு லிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. பின், காய்கறிகள், பழங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி